பெரம்பூர்: இரண்டு தலைமுறைக்கு முன்னர் பாட்டி வைத்தியம் என்ற முறை நடைமுறையில் இருந்து வந்தது. சளி பிடித்தால் கற்பூரவள்ளி இலையை சாறு பிழிந்து தருவார்கள், காய்ச்சல் என்றால் சுக்கு மிளகு கசாயம் போட்டு தருவார்கள். இதுபோன்று சிறுசிறு பிரச்னைகளுக்கு அவர்களது மூலமாக கிடைக்கும் மருத்துவ குறிப்புகள் பயனுள்ளதாகவே இருந்து வந்தது. நாளடைவில் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து அவரவர் தனித்தனியாக வாழ தொடங்கினர். இதன் விளைவாக சிறு பிரச்னை என்றாலும் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மருத்துவமனையை நாடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதுவும் தற்போது, செல்போன்களின் அசுர வளர்ச்சியாலும் யூடியூப் டாக்டர்களின் வளர்ச்சியாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மருத்துவர் உருவாகி வருகின்றனர். அந்த வகையில், தற்போது யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சித்த மருத்துவர் அல்லது மருத்துவர் என்ற போர்வையில் பலரும் மருத்துவ குறிப்புகளை கூற ஆரம்பித்து விட்டனர். இது எந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பலன் கொடுக்கிறது என்பது பயன்படுத்துபவர்களின் கையில்தான் உள்ளது.
உண்மையிலேயே யூடியூப் மருத்துவர்கள் தரும் மருத்துவ குறிப்புகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பது பயன்படுத்தியவர்களுக்கே வெளிச்சம். அந்த வகையில், குறிப்பிட்ட வியாதிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் என்ற ரீதியில் பல யூடியூப் மருத்துவர்கள் தரும் மருத்துவ குறிப்புகள் மருத்துவ உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவங்களாக உள்ளன.
சமீபத்தில், யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் மனைவி உயிரிழப்பு, கணவன் கைது, யூடியூப் பார்த்து உடல் எடையை குறைத்தவர் மரணம் போன்ற பல செய்திகளை நாம் அறிந்திருப்போம். ஆனால், இதிலிருந்து பொதுமக்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. மற்றவர்களுக்கு நடந்தால் செய்தி, நமக்கு நடந்தால் வேதனை என்ற ரீதியில் கூட யோசிக்காமல் தொடர்ந்து யூடியூப் மருத்துவர்களை பாலோ செய்து மருத்துவ குறிப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு மனிதனின் உடலை தொட்டுப் பார்க்காமல் மருத்துவம் பார்ப்பது எந்த வகையிலும் சாத்தியமில்லை என அடித்து கூறும் மருத்துவ உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் கட்டமைப்பு இருக்கும். அதை எதுவும் அறியாமல் அனைவருக்கும் ஒரே வகையான மருத்துவ குறிப்புகள் எந்த வகையில் எடுபடும் என்பதை கூட அறியாமல் தொடர்ந்து சில மருத்துவ குறிப்புகளை பின்தொடர்ந்து வருவதால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு மருத்துவமனையில் அதிக காலத்தை கழித்த அதி புத்திசாலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
யூடியூப் மருத்துவ குறிப்புகள் என்பது அனைத்து வகையான மக்களுக்கும் ஏற்புடையதா என்றால் கண்டிப்பாக அது ஏற்புடையது இல்லை எனவும், ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு கட்டமைப்பைச் சேர்ந்தது. எனவே மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் யூடியூப் மருத்துவர்கள் என்ற போர்வையில் சிலர் தரும் தவறான மருத்துவ குறிப்புகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், இதனால் நிரந்தர பக்க விளைவுகள் ஏற்பட்டு விடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
யூடியூப் மருத்துவ குறிப்புகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெரம்பூரைச் சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘ஒவ்வொருவருக்கும் நோயின் தன்மை ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணத்திற்கு, காய்ச்சல் என்பது பொதுவான ஒன்று. ஆனால், டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், வயிற்றுப் பகுதியில் சீழ் கட்டி இருந்தால் வரும் காய்ச்சல் என காய்ச்சலிலே இத்தனை வகையில் உள்ளன. இதற்கு மருத்துவர்களை அணுகினால்தான் எந்த வகையான காய்ச்சல் என்பதை கண்டுபிடித்து அதற்கு மருந்து சாப்பிட முடியும். ஆனால், பொது மருந்து என்று இதற்கு தனியாக எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட காய்ச்சல்கள் சரி ஆகாது.
இப்படி சாதாரண காய்ச்சலுக்கே பல பரிணாமங்கள் உள்ளபோது பல்வேறு நோய்களுக்கு யூடியூப்பை பார்த்து மருத்துவம் செய்வது எந்த வகையிலும் நியாயம் கிடையாது. மருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம். ஆனால் அதனை வைத்து மருத்துவம் பார்த்துக் கொள்வது என்பது புத்திசாலித்தனம் கிடையாது. எது உண்மையான மருத்துவ குறிப்பு, எது பொய்யான மருத்துவ குறிப்பு என்பதை பொதுமக்கள் கண்டறிவதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக சில மருத்துவ குறிப்புகள் அதிக நபர்களால் லைக் செய்யப்படுகிறது அல்லது பாலோ செய்யப்படுகிறது என யூடியூப்பில் காட்டும். ஆனால் பல தனியார் ஏஜென்சிகள் சிலரை புரமோட் செய்வதற்காக இவ்வாறு செய்வார்கள்.
இதனை நம்பி மருத்துவ குறிப்புகளை எடுத்துக் கொண்டால் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். யூடியூப் என்பது கமர்சியலான விஷயம் என்பதை பொதுமக்கள் அறிய வேண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. குறிப்பாக மருத்துவத் துறைக்கு ஒத்துவராது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.
மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும் பொருட்கள் கண்டிப்பாக பின்விளைவை ஏற்படுத்தும். அதனால் பொதுமக்கள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் யூடியூப் மருத்துவ குறிப்புகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
யூடியூப் மருத்துவர்கள் குறித்தும் மருத்துவ முறைகள் குறித்தும் புதுச்சேரியை சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘மருத்துவம் என்பது பொது மருத்துவம் கிடையாது. அந்த காலகட்டத்தில் ஒரு வைத்தியர் 10 மருந்துகளை வைத்திருப்பார். ஆனால் ஒவ்வொரு மருந்தையும் மாற்றி மாற்றி யாருக்கு எதை தர வேண்டும் என்று கொடுத்து வந்தார். கபசுர குடிநீர் நல்லது என கூறுவார்கள். ஆனால் சிலருக்கு அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். சிலருக்கு ஒத்து வராது. ஆங்கில மருத்துவத்தை தவிர்த்து மற்ற மருத்துவ முறைகளில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
பொதுவாக கொடுக்கப்படும் மருந்துகளால் கண்டிப்பாக பக்க விளைவுகள் ஏற்படும். ஒரு மருத்துவரைப் பார்த்து வாதம் பித்தம் கபம் என அனைத்தையும் அறிந்து மருந்து சாப்பிட்டால் மட்டுமே நோயாளிகளுக்கு உடல் சரியாகும். மீண்டும் அந்த பாதிப்பு வராது. இல்லையென்றால் கண்டிப்பாக பின் விளைவுகள் ஏற்படும். சித்தா ஆயுர்வேதா மருந்துகளை பொறுத்தவரை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
யூடியூப் பார்த்து செய்யப்படும் மருத்துவ குறிப்புகளில் 100 பேர் அதை பயன்படுத்துகிறார்கள் என்றால் பத்து பேருக்கு அது பலன் கொடுக்கும். மீதி 90 பேருக்கு கண்டிப்பாக அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் யூடியூப்பில் அதிகமாக மருத்துவ குறிப்புகள் சொல்லும் அளவிற்கு மருத்துவர்களுக்கு நேரம் கிடையாது. அதனால் யூடியூப்பில் வரும் அனைவரும் கைதேர்ந்த மருத்துவர்கள் என பொதுமக்கள் நினைத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.