கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து விபச்சார தொழில் செய்து வருவதாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து, குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அந்த தகவலின் படி, கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர்.
இதையடுத்து, சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய சாந்தி, மேகலா, மாயா உள்ளிட்ட மூன்று பெண் புரோக்கர்கள், மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட கார்த்தி, கார்த்திகேயன், சந்தோஷ், தன்னாசி என்ற சமுத்திரபாண்டி, கௌதம் உள்ளிட்ட எட்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆறு மாதமாக அந்த சிறுமியை வைத்து அவர்கள் விபச்சார தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் பல திடுக் தகவல்கள் வெளியானது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை வேறொரு பெண்ணை திருமண செய்து விட்டு பிரிந்து சென்றுள்ளார். அவரின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் ஆதரவற்ற நிலைக்கு அந்த சிறுமி தள்ளப்பட்ட நிலையில், உறவுக்கார பெண் மூலம் விபசார கும்பலிடம் சிக்கியுள்ளார்.
அந்த சிறுமியை கரூர் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி வி.ஐ.பி.க்கள் மற்றும் அரசியல் புள்ளிகளுக்கு விபச்சாரத்திற்கு கொடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, போலீசார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்று விரிவான விசாரணையை நடத்த உள்ளார்கள். பதினாறு வயது சிறுமியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.