சென்னை: தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு இணையதள இணைப்பு வழங்கும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ரூ.184 நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) தமிழகத்தில் உள்ளஅனைத்து கிராமப் பகுதிகளுக்கும் அதிவேக இணையதள இணைப்பு வழங்கும் பாரத்நெட் 2-ம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு தொகுப்புகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ‘பாரத்நெட் லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி’ திட்டத்துக்கு ரூ.184 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு, 2022-23 நிதியாண்டுக்கு மாநிலங்களின் மூலதன முதலீடுகளுக்கான சிறப்பு நிதியுதவி திட்டத்தின் 5-ம் பாகத்தில், நிதியுதவி பெறுவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. அதன்படி, டான்பிநெட் மேலாண் இயக்குநர், ‘பாரத் நெட் லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி’ திட்டத்துக்கு ரூ.323.42 கோடி ஒதுக்கும்படி கோரினார்.
அதன்பேரில், மத்திய நிதித் துறை ரூ.184 கோடியை அத்திட்டத்தின் கீழ் ஒதுக்கியது. நிதியை தமிழக அரசுக்கு அனுப்பியதுடன், அடுத்த 10 நாட்களுக்குள் டான்பிநெட் நிறுவனத்துக்கு அந்த தொகையை விடுவிக்குமாறும் அறிவுறுத்தியது.
இதையடுத்து, தமிழக அரசுக்கு மறுமதிப்பு திட்ட கருத்துருவை டான்பிநெட் மேலாண் இயக்குநர் அனுப்பியதுடன், ரூ.184 கோடியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன், கண்ணாடி இழைதிட்டத்துக்கான சிறப்பு நிதியுதவிரூ.73.83 கோடி உட்பட ரூ.184 கோடிக்கான அறிக்கையும் அளிக்கப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த தமிழக அரசு, ரூ.184 கோடியை வழங்க ஒப்புதல் அளித்ததுடன், அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் அனுமதித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.