கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை: பயணிகள் பீதி

கோத்தகிரி: கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அரசு பஸ் கண்ணாடியை காட்டு யானை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானை உலா வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து அரசு பஸ், லாரி, கார்கள் கோத்தகிரி சென்று கொண்டிருந்தன. தட்டப்பள்ளம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நீண்ட நேரம் அந்த சாலையில் உலா வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஒரு கட்டத்தில் ஒற்றை காட்டு யானையை விரட்ட டிரைவர்கள் ஹாரன் அடித்துள்ளனர். இதனால் கார், லாரியை தாக்கிய யானை, பின்னர் அரசு பஸ் கண்ணாடியை தாக்கி உடைத்தது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறினர். சிறிது நேரம் சாலையை மறித்தபடி நின்ற காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வனத்துறையினர் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து மேற்கொண்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* அரிசி ராஜா மசினகுடி திரும்பியது
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்தும், 2 பெண்களை கொன்றும் அட்டகாசம் செய்த 15 வயதுடைய அரிசி ராஜா யானை கடந்த 8ம் தேதி மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது. அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி முதுமலை சிங்கார வனச்சரகத்திற்கு உட்பட்ட காங்கிரஸ் மட்டம் பீட் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அந்த யானை மீண்டும் மசினகுடி வனப்பகுதிக்கு திரும்பி இருப்பதை ரேடியோ காலர் சிக்னல் மூலம் தெரிய வந்தது. அதனை விரட்ட தெப்பக்காட்டில் இருந்து 7 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினருக்கு போக்கு காட்டிய யானை கூடலூர் கிராஸ்கட்  வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.