தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை அடையும் சாத்தியமுள்ளது.
இதனால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழையோ அல்லது இடியூடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடகிழக்குத் திசையில் இருந்து 30 தொடக்கம் 40கிலோ மீற்றர் வரை காற்று வீசக் கூடும்.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசத்திலும், காங்கேசன்துறையில் இருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புக்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 55வீதம் வரை வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புக்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். அதேவேளை நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் ஓரளவு க்கு கொந்தளிப்பாக இருக்கும்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
எனவே மேற்படி கடற்பரப்புக்களில் கடல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
இக்காற்றழுத்தினால் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்ளிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
இப்பிரதேசங்களில் சில இடங்களில் 100மில்லி லீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ் கோரிக்கை விடுத்தார்.
Fathima nasriya