கடந்த 2021 மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியின் படி ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் முதல் ஆவின் பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதேபோன்று சமீபத்தில் நெய் விலை லிட்டருக்கு 115 ரூபாயும், வெண்ணை கிலோ 20 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வை காரணம் காட்டி ஆவின் விற்பனை செய்யும் மதிப்பு கூட்டு பொருளான நெய், வெண்ணெய், தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. அதேபோன்று கடந்த தீபாவளி பண்டிகை நேரத்தில் இனிப்பு வகைகளின் விளையும் உயர்த்தப்பட்டது.
இதேபோன்று ஆவின் நிறுவனத்தால் விற்கப்படும் ஐஸ்கிரீம், குல்பி, நறுமண பால், பால் பவுடர், பாதாம் பிஸ்தா பவுடர், போன்றவற்றின் விலையும் உயர்த்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “பால்வளத் துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றதற்கு பிறகு பால் விலை குறைந்துள்ளது. இது மக்களுக்கு எவ்வளவு பெரிய சாதகமான சூழல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என பெருமிதமாக பேசியுள்ளார். சமீபகாலமாக ஆவின் நிறுவனத்தின் அனைத்து பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் முதல் ஸ்டாலினின் இத்தகைய பேச்சு மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.