நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிதாக ஒரு கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார் அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க்.
ட்விட்டரில் கருத்து சுதந்திரம் தேவையா என்று எலான் மஸ்க் நடத்திய கருத்துக் கணிப்பு தான் அவரை இதுவரை இட்டுவந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார். இன்னும் சில மணி நேரங்கள் இந்த கருத்துக் கணிப்பு உயிர்ப்புடன் இருக்கும். இந்த செய்தியை பதிவு செய்த நேரத்தில் சுமார் 7,741,097 வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த ட்வீட்டை அடுத்து இன்னும் சில ட்வீட்களையும் மஸ்க் பதிவு செய்துள்ளார். அதில், நீங்கள் அளிக்கும் வாக்கை கவனமாக அளியுங்கள். ஏனெனில் உங்கள் விருப்பம் தான் நிச்சயமாக நிறைவேறும் என்று பதிவிட்டுள்ளார். மற்றுமொரு ட்வீட்டில் அதிகாரத்தை விரும்புபவர்கள் தான் அதற்கு கொஞ்சமும் தகுதியில்லாதவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.6 லட்சம் கோடி) வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தார். பல்வேறு சிக்கலுக்குப் பிறகு, இறுதியாக ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் அவர் கையகப்படுத்தினார். இதற்கான தொகையை செலுத்துவதற்காக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை அவர் விற்றுவருவதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் 23 பில்லியன் டாலர் (ரூ.1.8 லட்சம் கோடி) மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 3,500 ஊழியர்களுக்கு மேல் அவர் பணிநீக்கம் செய்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த செயலால் சர்வதேச அளவில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார்.
முன்னதாக நேற்று ட்விட்டர் வலைதளத்தில் பிற சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிற்கான புரோமோஷனை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022