அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) முதன் முதலாக நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷித் ரோவரை டிசம்பர் 11-ம் தேதி விண்ணில் ஏவியுள்ளது. 4,40,000 கி.மீ. தொலைவில் இருந்து அல் கவானநீஜ் விண்வெளி மையத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி முதன் முதலாக இந்த ரோவர் தகவலை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், ரஷித் ரோவரில் பயன்படுத்தப்பட்ட 90 சதவீத பாகங்கள் சென்னையைச் சேர்ந்த எஸ்டி அட்வான்ஸ்டு காம்போசைட் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனர் தேவேந்திர திருநாவுக்கரசு கூறியுள்ளதாவது:
ரஷித் ரோவருக்கான பாகங்கள் கார்பன் ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் (சிஎஃப்ஆர்பி), மெக்னீசியம் அலாய் மற்றும் அலுமினியத்தை பயன்படுத்தி சென்னையில் இரண்டு ஆண்டுகடின உழைப்பில் உருவாக்கப்பட்டவை. சுருக்கமாக கூறவேண்டுமெனில், ரஷீத் ரோவரின் 90 சதவீத பாகங்கள் எங்கள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை. இதில், ரோவரின் அமைப்பு, சக்கரங்கள், சோலார் பேனல்கள், கேமரா, ஹோல்டர் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களும் அடக்கம். அந்த ரோவரின்அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள 40 பாகங்கள் எஸ்டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை.
இஸ்ரோவிடமிருந்து பெரிய திட்டங்களுக்கான வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சந்திராயன் 2, மங்கள்யான் மற்றும் இன்னும் பிற திட்டங்களில் இணைந்துபணியாற்றி வருகிறோம். இதுதவிர, தனியார் செயற்கைகோள் தயாரிப்பாளருடனும் இணைந்து செயல்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.