நாக்பூர்: மகாராஷ்ராவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், பெண் எம்.எல்.ஏ ஒருவர் தனது இரண்டரை மாத குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.
மகாராஷ்ராவில் சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிறந்து இரண்டரை மாதங்களே ஆன தனது குழந்தையுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சரோஜ் அஹிர் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு கடந்த செப்டம்பர் 30-ம் தேதிதான் குழந்தை பிறந்தது.
கைக்குழந்தையை இரண்டு கைகளாலும் சேர்த்து அணைத்தவாறு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நான் ஒரு தாய். அதேநேரத்தில் ஒரு மக்கள் பிரதிநிதி. கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் சட்டப்பேரவை கூடவில்லை. தற்போதுதான் கூடி இருக்கிறது. இந்நிலையில், எனது தொகுதி சார்ந்த பிரச்சினைகளை எழுப்பவும், அரசிடம் இருந்து எனது தொகுதி மக்களுக்கான பதிலைப் பெறவுமே நான் வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கென புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, உயர்தர தொழில்நுட்பங்களுடன் நாக்பூர் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி இருக்கிறது. முதல்நாளான இன்று, கர்நாடக எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “மாநில எல்லைப் பிரச்சினை தொடர்பாக முதல்முறையாக உள்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் அரசியலுக்கு இடம் இல்லை. எல்லையில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும்” என வலியுறுத்தினார்.