சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கிறிஸ்துவ நண்பர்கள் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
பின்னர் பேசிய அவர், “இயேசு கிறிஸ்து மிகப்பெரிய புரட்சியாளர். சாட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் ஊரிலுள்ள ஆலயத்துக்குச் சென்று அர்ச்சகரை சாட்டையால் அடித்து வெளியேற்றி மிகப்பெரிய புரட்சியை செய்தார். பழைய நடைமுறையை ஒழித்து புதிய நடைமுறை உருவாக வேண்டும் என இயேசு கிறிஸ்து நினைத்தார்.

பழைய பழக்கவழக்கங்களில் பல சீர்கேடுகள் இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் உலகத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் அனைவரும் சொன்னார்கள். அதில் இயேசு கிறிஸ்து முதன்மையானவர். நம் குடும்பத்தை நேசிப்பது போல உறவினர்களை நேசிப்பதை போல மதத்தையும் நேசிக்கலாம். ஆனால் மதத்தை யார் மீதும் திணிக்காதீர்கள் என மகாத்மா காந்தியடிகள் சொன்னார்.
இதைத்தான் ராகுல் காந்தி மகாத்மா காந்தி இந்து என்றும், கோட்சே ஒரு இந்துத்துவவாதி என்றும் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதையே பறை சாற்றுகின்றன. நாம் மதங்களுக்கோ, நம்முடைய கடவுளுக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதில் உள்ள தவறான பழக்கங்களுக்கும் நடைமுறைகளுக்கும் மூடநம்பிக்களுக்கும்தான் எதிரானவர்கள் என்பதுதான் நமது மதச்சார்பின்மையின் மையக் கருத்தாகும். உயர்ந்த கருத்துகளுக்கு உறைவிடமானவர் இயேசு கிறிஸ்து” என்றார்.