மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத பைப்லைன் உடைந்து சாலையில் கழிவுநீர் தேக்கம்: போக்குவரத்து பாதிப்பு

திருவெற்றியூர்: சென்னை அம்பத்தூர், கொரட்டூர், அண்ணாநகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ரெட்டேரி வழியாக ராட்சத பைப்லைன் மூலம், கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை மாதவரம் ரவுண்டானா அருகே மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் போது, எதிர்பாராத விதமாக இந்த ராட்சத பைப்லைன் உடைந்து, கழிவுநீர் வெளியேறியது.

இதனால், மெட்ரோ ரயில் பணியாளர்கள், கழிவுநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய முயன்றனர். ஆனால், சுமார் ஒரு அடி அகலத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால், அதை அடைக்க முடியாததால், மாதவரம் ரவுண்டானா மற்றும் அதை சுற்றியுள்ள காலியிடங்கள் மற்றும் சாலை மற்றும் கடை வாசலில் கழிவுநீர் குளம்போல தேங்கியது. இதனால், அந்த வழியாக வாகனத்திலும், நடந்தும் சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும், அவ்வழியே வாகனங்கள் கழிவு நீரில் மெதுவாக ஊர்ந்து சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, மாதவரம் போக்குவரத்து ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் மாடசாமி ஆகியோர் கொண்ட போக்குவரத்து போலீசார், குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ரெட்டேரியில் இருந்து வரும் கழிவுநீர் வால்வுகளை அடைத்தனர்.

பின்னர், ராட்சத நீரேற்று மோட்டார் மூலம் சாலையில் தேங்கியிருந்த கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை வடக்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் ஹார்ஷ் சிங் பார்வையிட்டு, கழிவுநீர் வெளியேற்றத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.