மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது தமிழகத்தில் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளது. இதற்குத் தொடக்கமாக அமைந்திருப்பதே தமிழக அரசு மீது நீதிமன்றத்திற்கு எழுந்த அதிருப்தி தான். தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 நாள் வேலை திட்டம் தொடர்பாகப் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையில், தனியார் நிலத்தில் விவசாய வேலையில் ஊழியர்கள் பணியாற்ற அனுமதித்தது உறுதியானது. இதில் கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், மனுதாரர் தரப்பு ஆதாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது என்றது. மேலும் இதே நிலை தமிழகம் முழுவதிலும் தொடர்வதாகவும், இதனால் அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது. மேலும், முறையாக நடக்காமல் இருக்கும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.

திட்டப்பணிகள் முறையாகக் நடக்காதது ஏன்?
1. தமிழகத்தில் இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு நிதி மட்டும் ஒதுக்கப்படுவது மட்டும் போதாது. அதற்கு செய்ய வேண்டிய மராமத்துப் பணிகள், நீர்நிலை சீரமைப்பது, சாலை சரி செய்வது எனப் பணிகளும் திட்டமிடப்பட வேண்டும். இது தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து திட்டமிடல் சரியாக நடைப்பெற்றிருந்தால், நீர்நிலைகள் சுருங்கியிருக்காது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது.
2. இதைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் இதை முறையாகக் கண்காணிக்காமல் இருந்தது இந்தத் திட்டம் பின்னடைவைச் சந்திக்கக் காரணம். அரசு ஊழியர்களே அரசின் நிதியைப் பெற்றுக் கொண்டு தனியார் வேலைகளில் தொழிலாளர்களை ஈடுபட செய்தனர். இதைச் சுட்டிக்காட்டிதான் அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்திய ஊழியர்கள் மீது துறை சார்ந்து நடவடிக்கை எடுக்க நீதி மன்றம் உத்தரவிட்டது.
3. குறைந்த நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதும் ஓர் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். குறிப்பாக, 100 நாள் வேலை என்பதே திட்டம், ஆனால் மிகக் குறைந்த நாளுக்கு மட்டுமே வேலைத் தரப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பில்லாமல் பிற தொழில்களில் ஈடுபடுகிறார்கள். எனவே, திடீரென அறிவிக்கப்படும் இந்தத் திட்டத்தையும் விடமுடியாமல் முன்பு பார்த்த வேலையையும் விட முடியாமல் மக்கள் இரண்டிலும் ஈடுபட முயற்சி செய்கிறனர். இதன் விளைவாக அரசு திட்டம் முழுமையாக செயல்படாமல் போகிறது.
4. ஆண்டுதோறும் சமூக தணிக்கைச் சிறப்புக் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்தத் திட்டத்தால் எந்தெந்த வேலைகள் நிறைவடைந்திருக்கிறது என்பது விவாதிக்கப்பட வேண்டும் . குறிப்பாக, முடிக்கப்பட்ட வேலைகள் அதற்கான செலவுத் தொகை தணிக்கை செய்யப்பட்டு கிராம சபை ஒப்புதலுடன் மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இதைப் பெரும்பாலான ஊராட்சிகள் பின்பற்றவில்லை என்னும் குற்றசாட்டைச் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் மத்திய அரசு 75% பங்கும் மாநில அரசு 25% பங்கும் ஒதுக்குகிறது. அதன்படி, மத்திய அரசு ரூ.674 கோடியும் மாநில அரசு ரூ. 224 கோடியம் ஒதுக்கியிருக்கிறது. மேலும் நிர்வாகச் செலவுக்காக ரூ.49 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் மீது நீதிமன்றம் தெரிவித்திருக்கும் அதிருப்தி தொடர்பாகப் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,” இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நிதியை மாநில அரசு அபகரிப்பதாகப் புகார்கள் வந்தது. இதைக் கட்டுப்படுத்த வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், போலியான ஆவணங்கள் கொண்டு முறைகேடுகள் நடக்கிறது. குறிப்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் வேலை அளிப்பதும், அதில கமிஷன் தொகைப் பெறுவதும் வாடிக்கையாகிவிட்டது,’ என்றார்.
இந்தத் திட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் அவர்களிடம் பேசினோம், “இதை நூறு நாள் வேலைத் திட்டம் என சொல்வதே தவறு. அத்தனை நாட்கள் வேலையை எந்த ஊராட்சியும் உறுதி செய்யவில்லை. மிகக் குறைந்த நாட்களுக்கு மட்டுமே வேலை ஒதுக்கப்படுகிறது. இது பல மாநிலங்களில் தோல்வியடைந்த திட்டமாக இருக்கும் நிலையில், தமிழக அரசு தேர்தல் வாக்குக்காக மட்டுமே இதை தொடர்கிறார்கள். இது கிராமப் புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், இதை நெறிப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்து ஆண்டு முழுவதும் வேலை தர வேண்டும். குறிப்பாக, உள்ளூர் வளங்களை மேம்படுத்தவும், உற்பத்தி சார்ந்த தொழில்களிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு இதை நெறிப்படுத்தினால், இது நல்ல திட்டமாக இருக்கும்,” என்றார்.

நீதிமன்றம் அதிருப்தி தொடர்பாக, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியதாவது, ”இந்தியாவிலேயே இந்தத் திட்டம் சிறப்பாக நடைபெறுவது தமிழகத்தில் தான். அதற்கு விருதுகளும் தமிழகம் பெற்றிருக்கிறது. அப்படி ஒன்றிரண்டு இடத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு, அந்தப் பொறுப்பு வகிக்கும் கிராம பணியாளர்கள், தாசில்தார்கள் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். ஆனால், நீதிமன்றம் எல்லா இடங்களிலும் இந்தத் தவறு நடப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது ஏன்? என தெரியவில்லை.

இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தத் திட்டமே செயல்படவில்லை. ஆனால் தமிழகம் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டில் திட்டத்திற்கு மொத்தமாக ரூ. 949 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . மத்திய அரசுக் கூட்டணியில் இருந்தபோது திமுக-வின் பெரும் முயற்சியில் திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே அதை சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறோம். இதில் நீதிமன்றம் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியிருக்கும் நிலையில் அதைச் சீர் செய்வோம்,” என்றார்.