புதுடெல்லி: ‘சட்டம் என்பது கூரான வாள் போல் இருந்து அப்பாவிகளை அச்சுறுத்துவதை விட, அவர்களை பாதுகாக்கும் கேடயமாக இருக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மீறியதாக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் புகாரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் எஸ்.ஆர்.பட் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கை பொறுத்த வரையில், 2013ம் ஆண்டு மனுதாரரின் நிறுவனத்தின் மருந்து ஆய்வாளர் ஆய்வு செய்துள்ளார். அப்போது விதிமுறை மீறப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின், 4 ஆண்டு கழித்து 2017ல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு பிரதிவாதி எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. மேலும், புகாருக்கான எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. இவற்றை கருத்தில் கொண்டு மனுதாரர்கள் மீதான கிரிமினல் நடவடிக்கையை ரத்து செய்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது. அற்பமான வழக்குகள் அதன் புனிதத் தன்மையை சிதைக்காமல் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். சட்டம் என்பது வாள் போன்று அப்பாவிகளை அச்சுறுத்துவதை விட, அவர்களை பாதுகாக்கும் கேடயமாக இருக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறினர்.