இலங்கை பொருளாதாரத்திற்கு மலையக தமிழ் மக்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்கு அமைச்சரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுதொடர்பான ஆலோசனையை சமர்ப்பித்தார்.
இந்த மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு பெருந்தோட்டத் துறை அமைச்சு மற்றும் ஏனைய குறித்த அரச நிறுவனங்களும் இணைந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது அமைதச்அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
11. இலங்கைப் பொருளாதாரத்திற்கு மலையகத் தமிழ் மக்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்களைப் பாராட்டுதல்
இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து எமது நாட்டுக்குப் புலம்பெயர்ந்த மலையகத் தமிழ் சமூகத்தவர்கள் மத்திய மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு வாழ்ந்து வருவதுடன், அவர்கள் பல்வேறுபட்ட வகையில் தேசிய பொருளாதாரத்திற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
அவர்களுடைய ஒத்துழைப்பு பெருந்தோட்டத் துறையின் மொத்த வருமானத்தின் 1/3 பங்காகவுள்ளது. 2023 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் மலையகத் தமிழ் சமூகத்தவர்களின் முதற்குடிகள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பெருந்தோட்டத் துறை அமைச்சு மற்றும் ஏனைய குறித்த அரச நிறுவனங்களும் இணைந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அடையாளங் காணப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.