கோத்தகிரி: சாலையை மறித்து நின்ற காட்டு யானை – வாகனங்களை தாக்க முயன்றதால் அச்சம்

கோத்தகிரி சாலையை மறித்தபடி நின்ற காட்டுயானை வாகனங்களை விரட்டி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் மலைச்சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் மாறும் யானைகள் மலைப்பாதையை கடந்து பயணித்து வருவதே இதற்கு காரணம் என்பதால் இவ்வழியே பயணிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் தட்டப்பள்ளம் என்னுமிடத்தில் சாலையின் நடுவே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட அவ்வழியே கடந்து செல்ல வேண்டிய அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையை மறித்தபடி யானை நின்றதால் வாகனங்களை இருபுறமும் நிறுத்தி விட்டு அது கடந்து செல்லும் வரை அச்சத்துடன் காத்திருந்தனர்.
image
இதையடுத்து தன் எதிரே நின்றிருந்த லாரியை தாக்கும் வகையில் யானை நெருங்கியதால் லாரியை ஓட்டுநர் மெல்ல மெல்ல பின்நோக்கி நகர்த்திச் செல்ல முயன்றார். ஆனாலும் யானை, லாரியை நோக்கி வந்தபடி இருந்தது. ஒரு கட்டத்தில் லாரியின் பின்புறம் நின்றிருந்த அரசு பேருந்தை நோக்கி ஓடிவர துவங்கயது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து பேருந்தின் அருகே வந்த யானை அதன் முன் பக்கத்தை தனது துதிக்கையால் அடித்தது. பின்னர் நிறுப்பட்டிருந்த வாகனங்களின் ஊடே நடந்து சென்ற காட்டு யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
சாலையை மறித்து நின்ற ஒற்றை யானையால்; அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பதட்டமான சூழல் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சாலையில் யானைகளை கண்டால் யாரும் தங்களது வாகனங்களில் இருந்து இறங்கக் கூடாது என்றும், சிறிது நேரம் அமைதியாக இருந்தால் யானைகள் காட்டுக்குள் சென்று விடும் என்று தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.