தண்ணீர் வரி 1.94 கோடியா? – என்னடா இது! தாஜ்மஹாலுக்கு வந்த சோதனை?

உலக அதிசயங்களில் ஒன்றான ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் காதல் சின்னமாகத் தேசங்கள் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் இது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைக்கும் தாஜ்மஹாலுக்கு வரலாற்றில் முதன்முறையாகச் சொத்து வரி மற்றும்  தண்ணீர் வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள, தாஜ்மஹாலின் வீட்டு வரியாக ரூ.1.47 லட்சத்தையும், தண்ணீர் வரியாக ரூ.1.94 கோடியையும் செலுத்துமாறு இந்தியத் தொல்லியல் துறையை (ASI) குடிமை அமைப்பு வாரியம் கேட்டுள்ளது. நிலுவைத் தொகையைச் செலுத்த ASI க்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் சொத்து “இணைக்கப்படும் (attached)” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வரி 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கான பில்கள் என்று ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிவிப்பில்  தெரிவித்துள்ளது.
image

ராஜ் குமார் படேல் அறிக்கை

இதுபோன்ற அறிவிப்புகள் தவறுதலாக வந்திருக்க வேண்டும் என்றும், இதற்கு முன்பு ஒருபோதும் தாஜ்மஹாலுக்கு வரி செலுத்துவது போன்ற நிகழ்வு  நடக்கவில்லை என்றும்  ASI கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் குமார் படேல் கூறியிருக்கிறார். மேலும், தாஜ்மஹால் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம். எனவே ASI  அத்தகைய வரிகளைச் செலுத்த வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி தண்ணீர் கூட தாஜ்மஹால்-ஐ சுற்றியுள்ள பகுதியில் உள்ள தோட்டங்களைப் பராமரிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

image

இந்நிலையில் தாஜ்மஹால் வரி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தனக்குத் தெரியாது என்று நகராட்சி ஆணையர் நிகில் டி ஃபண்டே தெரிவித்திருக்கிறார். “அரசு கட்டிடங்கள் மற்றும் மத ஸ்தலங்கள் உட்பட அனைத்து வளாகங்களுக்கும் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையின் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தின் சரியான செயல்முறையைப் பின்பற்றி தள்ளுபடி வழங்கப்படுகிறது, ஏஎஸ்ஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், அவர்களிடமிருந்து பெறப்பட்ட பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

எந்த ஒரு நினைவுச்சின்னத்திற்கும் வரி செலுத்தவேண்டியது  இல்லை என்றும், 1920 தாஜ்மஹால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டதையும் அதுமட்டுமின்றி  வணிகரீதியாகப் பயன்படுத்தாத தண்ணீருக்கு வரி செலுத்த வேண்டியதில்லை எனவும் ASI குறிப்பிட்டுள்ளது. மேலும் பிரிட்டிஷ் ஆட்சியின் நாட்களில் கூட தாஜ்மஹாலுக்கு வரி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-அருணா ஆறுச்சாமிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.