ராமேஸ்வரம்: கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் மீனவர்கள், வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமான் மற்றும் இலங்கை இடையே தற்போது குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 50 கிமீ வரை பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதித்து மீன்வளத்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் நேற்று காலை மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. ராமேஸ்வரம் மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்தால் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்பட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.