*7 கும்கிகளுடன் வனத்துறையினர் கண்காணிப்பு
கூடலூர் : காங்கிரஸ் மட்டத்தில் விடப்பட்ட பந்தலூர் மக்னா 2 (அரிசி ராஜா) யானை மசினகுடி பகுதிக்கு திரும்பியது. கூடலூர் நோக்கி வரும் யானையை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் 7 கும்கி யானைகளுடன் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான தேவாலா, நாடுகாணி, புளியம்பாறை, பாடந்துறை, வேடன்வயல், கோழிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை 15 வயதுடைய பந்தலூர் மக்னா 2 என வனத்துறையினரால் அழைக்கப்படும் அரிசி ராஜா யானை உடைத்து சேதப்படுத்தியது.
2 பெண்களையும் மிதித்து கொன்றது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கும்கிகள் உதவியோடு யானையை பிடிக்க முயன்றனர். 13 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் கடந்த 8ம் தேதி புளியம்பாறை நீடில் ராக் வனப்பகுதியில் வனத்துறையினர் அரிசி ராஜாவை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி முதுமலை காப்பக வெளிவட்ட பகுதியான சிங்கார வனச்சரகத்திற்கு உட்பட்ட காங்கிரஸ் மட்டம் பீட் வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து யானையை ரேடியோ காலர் சிக்னல் மூலமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை யானை மீண்டும் மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு திரும்பி இருப்பதை ரேடியோ காலர் சிக்னல் மூலமாக வனத்துறையினர் தெரிந்து கொண்டனர். மசினக்குடி,தெப்பக்காடு சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடியின் பின்புற வனப்பகுதியில் இந்த யானை இருப்பது கண்டறியப்பட்டது. இப்பகுதி ஏற்கனவே டி 23 புலிக்கு மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட பகுதியாகும்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக தெப்பக்காட்டில் இருந்து விஜய், பொம்மன், சுஜய் சந்தோஷ், சுமங்களா உள்ளிட்ட 7 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
எனினும் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய யானை அங்கிருந்து புறப்பட்டு கூடலூர் நோக்கி வந்து கிராஸ்கட் வனப்பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்து யானை மீண்டும் முன்னேறாமல் தடுக்கும் வகையில் கும்கி யானைகள் மற்றும் வனப் பணியாளர்கள் மூலம் யானையை கண்காணித்து திருப்பி விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த யானை தேவாலா, நாடுகாணி பகுதியில் சுற்றித் திரிந்தபோது கடந்த வருடத்தில் வனத்துறையினர் கும்கி யானைகள் மூலம் கேரள வன எல்லைக்கு விரட்டினர்.
இதையடுத்து ஓரிரு மாதங்கள் ஊருக்குள் வராமல் திரிந்த யானை மீண்டும் புளியம்பாறை பகுதியில் புகுந்து வீடுகளை உடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து யானை விரட்டப்பட்டபோது கரிய சோலை நீடில் ராக் வனப்பகுதிக்குள் சென்றது. அங்கும் ஒரிரு மாதங்கள் காட்டுக்குள் இருந்த யானை மீண்டும் புளியம்பாறை, பாடந்துறை பகுதிகளில் புகுந்து வீட்டுகளை உடைத்ததோடு தேவாலா, வாளவயல் பகுதியில் வீட்டை உடைத்து மூதாட்டியை கொன்றது.
இதையடுத்து அது பிடிக்கப்பட்டது. அரிசி, தானியங்களை சாப்பிட்டு பழகிய யானை மீண்டும் ஊருக்குள் வரும் என்பதால் அதனை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று கும்கியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் யானை காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது.
இப்போது இந்த யானை காங்கிரஸ் மட்டம் பகுதியில் இருந்து திரும்பி முதுமலை மசினகுடி வனப்பகுதிக்குள் திரும்பி வந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் அது கூடலூர் பகுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல வருட காலமாக சுற்றித்திரியும் ரிவால்டோ என்ற யானையையும் வனத்துறையினர் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி தெப்பக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட உள்வனப் பகுதியில் விட்டனர்.
ஆனால் மறுநாள் மாலையே இந்த யானை திரும்பி மீண்டும் மசினகுடி பகுதிக்கு வந்து சேர்ந்தது. இதே போல் இந்த யானையும் இரவு நேரத்தில் வனத்துறைக்கு போக்கு காட்டி கூடலூர் பகுதிக்கு திரும்பி விடலாம் என்ற அச்சம் மீண்டும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி விரட்ட உத்தரவு
காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில் விடப்பட்ட இந்த மக்னா யானை தற்போது தெப்பக்காட்டை ஒட்டிய கிராஸ்கட் சான்ரோடு வனப்பகுதியில் இருப்பதால் அப்பகுதியைச் சுற்றிலும் கும்கி யானைகளை நிறுத்தி வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த யானை எக்காரணம் கொண்டும் கூடலூர் பகுதியில் நுழைந்து விடாமல் தடுக்க வேண்டும் என்றும் அதற்கு எத்தனை பணியாளர்கள் எத்தனை வாகனங்கள் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யானையை விரட்டுவதில் சிக்கல்
சான்ரோடு பகுதியில் காட்டு யானை ஒன்று மஸ்த்துடன் சுற்றி வருவதாகவும், இதனால் கும்கி யானைகள் வனப்பகுதிக்குள் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மட்டம் பகுதியில் இருந்து தற்போது மசனகுடி வனச்சரகத்திற்குள் புகுந்துள்ள அரிசி ராஜா யானையுடன் வேறு ஒரு கொம்பன் யானையையும் கூடவே அழைத்து வந்துள்ளதாகவும், இதனால் இந்த யானையை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், சான்ட்ரோடு பகுதியில் இருந்து தெப்பக்காடு மசினகுடி சாலையைக் கடந்து தெப்பக்காடு சரக்கத்திற்குள் யானை புகுந்து விட்டால் இலகுவாக அது கூடலூர் எல்லைப் பகுதிக்குள் வந்துவிடும் என கூறப்படுகிறது.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் குளிர்ச்சியான வனப்பகுதியில் திரிந்த இந்த யானை அதிக சூடு உள்ள வறட்சியான வனப்பகுதியான காங்கிரஸ் மட்டம் பகுதியில் அதிக காலம் நிற்காது என்றும், பழைய இடத்திற்கு திரும்ப முயற்சிக்கும் என யானைகளின் நடவடிக்கைகளில் அனுபவம் மிக்க இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.