4 தூதுவர்கள் ,2 வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவி குழுவின் அனுமதி  

நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (13) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, பிரான்சுக்கான இலங்கையின் புதிய தூதுவராக மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக நிரோஷனி மனீஷா டயஸ் அபேவிக்ரம குணசேகரவை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோன்று, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக ஹிமாலி சுபாஷினி டி சில்வா அருணதிலகவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும், ஜேர்மனுக்கான புதிய தூதுவராக லங்கா வருணி முத்துகுமாரனவை நியமிப்பதற்கும், ஜோர்தானுக்கான புதிய தூதுவராக ஜே.ஏ.டி.எஸ். பிரியங்கிகாவை நியமிப்பதற்கும், வியட்னாமுக்கான புதிய தூதுவராக சஜீவ உமங்க மெண்டிஸ் அவர்களை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ தலதா அத்துகோரல, கௌரவ விஜித ஹேரத், கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கௌரவ உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.