அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தாக்கு

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசியல் தெரியாத பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற்று தருவதை விட்டு, தமிழக அரசை குறை கூறி வருகிறார். குறை சொல்வதற்கு அண்ணாமலைக்கு தகுதியில்லை.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சை அதிகாரிகள் உட்பட யாரும் கேட்பதில்லை. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வருடன் இணக்கமாக இருப்பதாக கூறி கொண்டு முதல்வருக்கு எதிராக பணியாற்றி வருகிறார். முதல்வர் ரங்கசாமி பொம்மையாகவே செயல்பட்டு வருகிறார். துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி முதல்வராகவும், துணை ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என பாஜ அரசு அறிவித்துள்ளது. எனவே பாஜ கூட்டணியை விட்டு விலகி என்.ஆர்.காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் முழு ஆதரவளிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.