சமீப காலத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்துவருகிறது. அதன் நீட்சியாக சமீபத்தில் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கியது என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, வரும் ஏப்ரம் மாதம் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வதாகவும், அப்போது தன்னுடைய வாட்ச் உட்பட அனைத்து சொத்துகளின் விவரங்களையும், தி.மு.க அமைச்சர்களின் சொத்து விவரங்களையும் வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,” ராகுல் காந்தியின் பயணம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் வாட்ச் விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது.

அண்ணாமலை எந்த வாட்ச் கட்டியிருந்தால் என்ன? அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பலன்? அண்ணாமலையும் அந்த வாட்சின் ரசீதை வெளியிட்டு உண்மையை சொல்லியிருக்கலாம்.
ரஃபேலில் கொடுத்திருந்தால் ஆமாம் ரஃபேலில் கொடுத்தார்கள் என ஒப்புக்கொண்டிருக்கலாம். இது இவ்வளவு பெரிய விவாதப் பொருளாவது நல்லதாகப் படவில்லை. அண்ணாமலை முடிவு செய்திருக்கும் நடைபயணமும், ராகுல் காந்தி நடத்திக் கொண்டிருக்கும் நடைபயணமும் வேறு வேறு. இரண்டையும் ஒப்பிடவே முடியாதது. அண்ணாமலையின் நடைபயணம் எந்த வகையிலும் பயனளிக்காது” எனத் தெரிவித்திருக்கிறார்.