புதுடெல்லி: ‘சீன ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்குவதை எப்போது நிறுத்துவீர்கள்’ என்று பாஜவுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய-சீனா எல்லையான தவாங்கில் கடந்த வாரம், சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதை இந்திய வீரர்கள் தடுத்தபோது, இருதரப்புக்கும் இடையே கைக்கலப்பானது. இதில், இருநாட்டு வீரர்கள் காயமடைந்தனர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், சீனாவின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவம் குறித்து ஒன்றிய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், ‘எல்லையில் 2020க்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்’ என்று எப்போது சந்தேகத்திற்கு இடமின்றி அரசு அறிவிக்கும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இதற்கு நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள யாங்ட்சேயில் அவர்கள் நிலைநிறுத்தப்பட்டனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டும் மற்றும் கவுரவிக்கப்பட வேண்டும்’ என்று பதிலளித்தார்.
இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது எதிரிகளுக்கு எதிராக வலுவாக நிற்பதால், நமது வீரர்கள் ‘மதிப்பு, மரியாதை மற்றும் பாராட்டப்பட வேண்டும்’ என்ற அமைச்சரின் கருத்தை காங்கிரஸ் ஏற்கிறது. பாகிஸ்தான் தூதரிடம் செய்தது போல் சீன தூதரை நேரில் அழைத்து இந்தியா ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆக்கிரமிப்பு நடக்காதது போல் நடந்து கொள்வதன் மூலம் சீன ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்குவதை எப்போது நிறுத்துவீர்கள்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.