புதுடெல்லி: ‘அவசரமான விஷயங்களுக்காக விதி 267ன் கீழ் பட்டியலிடப்பட்ட அலுவல்களை ஒத்திவைக்க தயங்க மாட்டேன்’ என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறி உள்ளார். அருணாச்சல் எல்லையில் இந்தியா, சீனா வீரர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைக்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் கடந்த இரு தினங்களாக விதி 267ன் கீழ் நோட்டீஸ் தாக்கல் செய்கின்றனர். ஆனால், நேற்று முன்தினம் இதுபோன்ற எதிர்க்கட்சிகளின் 9 நோட்டீஸ்களை மாநிலங்களவை தலைவர் தன்கர் நிராகரித்தார். நேற்று இதுபோன்ற நோட்டீஸ்களை அவர் ஏற்றுக் கொ்ளவில்லை. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைன் பேசுகையில், ‘‘மாநிலங்களவையின் முந்தைய தலைவர் வெங்கையா நாயுடு அவரது பதவிக்காலத்தில் ஒருமுறை கூட விதி 267ன் கீழ் தரப்பட்ட நோட்டீசை ஏற்கவில்லை’’ என்றார். இதற்கு பதிலளித்த தன்கர், ‘‘தகுதியான நோட்டீஸ்கள் நிச்சயம் ஏற்கப்படும். என்னை நீங்கள் நம்பலாம். சரியான அவசரமான விஷயங்கள் தினமும் வந்தாலும் நான் 267 விதியை பயன்படுத்த தயங்க மாட்டேன். அதே சமயம், தகுதியான விஷயமில்லை என்றால் அதை நிச்சயம் ஏற்க மாட்டேன். நோட்டீசின் தகுதியை பொறுத்தே முடிவெடுப்பேன்’’ என்றார்.