தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழகஅரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தாய்மொழியான தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் என தமிழகஅரசு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில்,  . தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை இல்லை என ராகவன் என்பவர்  உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தமிழாசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியர்களை நியமிக்க முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015-16 ம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, ஐ.சி.எஸ்.இ, உள்ளிட்ட பாட திட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளை கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் பிரிவுகள் உள்ளதாகவும், தமிழ் கட்டாய பாடச் சட்டத்தில் அதுபோல எந்த பிரிவுகளும் இல்லாததால், இச்சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை, விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையைத் தொடர்ந்து, தமிழ் கட்டாய பாட சட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன்,  இந்த மனுவை  மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.