மதுரை: தேனி மாவட்டம் மேகமலையில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதை தடுக்காத வனத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கையின் நிலை குறித்து வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் யாரையும் மரங்களை வெட்ட வனத்துறை அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தேனி ஜெயபால் 2013 ல் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மேகமலை வன உயிரின சரணாலயம் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அரியவகை மரங்கள், விலங்குகள், பறவைகள், பட்டாம் பூச்சிகள் வாழ்கின்றது. மேகமலையில் தேயிலை எஸ்டேட்கள் அதிகம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியுள்ளனர். இதற்கு வனத்துறையின் சில அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். சி.பி.ஐ.,விசாரணை கோரி தலைமை வனப் பாதுகாவலர், தேனி கலெக்டரிடம் மனு அளித்தார்.
மேகமலை வன உயிரின கோட்டத்திற்கு உட்பட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்களை இடமாறுதல் செய்ய வேண்டும். மரங்களை வெட்ட அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும். சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு கூறியுள்ளார்.
உரிய அதிகாரியின் முன்னுமதியின்றி வனத்தில் மரங்களை வெட்டுவது சட்ட விரோதமானது. இது காடுகளின் பரப்பளவை குறைப்பது மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் சமநிலையை சீர்குலைக்கிறது. மண் அரிமானத்திற்கு வழிவகுக்கும். அப்பகுதியின் காலநிலை மாறுபடும். வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதிக்கிறது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் சுற்றுச்சூழலை மட்டும் பாதிக்காது. பல்லுயிர், வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
10 ஆண்டுகள் கடந்தும், தவறு செய்த அதிகாரிகள் மீதான துறை ரீதியான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மரங்களை அனுமதியின்றி வெட்டியதற்காக 2012 ல் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்குப் பதியப்பட்டது. தேனி கலெக்டர் 2018-ல் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் எஸ்டேட் நிர்வாகத்திற்கு எதிராக உத்தமபாளையம் நீதிமன்றத்தில் 2021-ல் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. எஸ்டேட் நிர்வாகம் மரங்களை வெட்டியதாக 2012-ல் அப்போதைய மதுரை உதவி விஜிலன்ஸ் வனப் பாதுகாவலர் அறிக்கை அளித்துள்ளார்.
மேகமலை வனப் பகுதியில் எஸ்டேட் நிர்வாகம் மரங்களை வெட்டியதை வனத்துறை அதிகாரிகள் தடுக்கவில்லை என்பதை மேற்கண்ட உண்மைகள் திட்டவட்டமாக சுட்டிக்காட்டுகின்றன. அனுமதியின்றி விலை மதிப்புமிக்க மரங்களை வெட்டி கடத்தியது வனத்துறை அதிகாரிகளின் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மரங்களை வெட்டியதை தடுக்காமல் கடமை தவறிய வனத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, குறிப்பாக வெங்கடசாமிக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கையின் நிலை, எஸ்டேட் நிர்வாகத்திற்கு எதிராக உத்தமபாளையம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தற்போதைய நிலை குறித்து 6 வாரத்தில் வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேகமலை வன உயிரின சரணாலயத்தில் யாரையும் மரங்களை வெட்ட வனத்துறை அனுமதிக்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.