ரஃபேல் வாட்ச் வெறும் ஆரம்பம் தான்… 2024ல் டார்கெட் 25… அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்!

கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். விழாவில் சுமார் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கட்சி தொண்டர்கள், பயனாளிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பாஜகவிற்கு பெரிய எழுச்சி

பின்னர் சிறப்புரை ஆற்றிய அண்ணாமலை, ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். உண்மையான மனிதத்தை பார்க்க நலத்திட்ட உதவிகள் தான் தேவை. தேசத்தை இதயத்தில் வைத்து நடக்கும் கட்சி பாஜக. கடவுளுக்கு மிக நெருக்கத்தில் இருப்பவர்கள், உடலில் சிறு குறைகள் இருந்தாலும் மனதில் எந்த குறையும் இல்லாதவர்களே.

ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது.

ரஃபேல் விவகாரம்

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஊழல் செய்து வருகிறார்கள். டீக்கடையில் எப்போது ரஃபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ? அன்றைக்கு என்னுடைய வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன். ஊழலை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் நம்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

ஊழலுக்கு தனி வெப்சைட்

2ஜி விவகாரம் எப்படி திமுகவை 10 ஆண்டுகள் ஆட்சியில் அமரவிடாமல் செய்ததோ, அதேபோல் மீண்டும் நிகழும். திமுகவின் ஊழல் பற்றி தகவல் தெரிவிக்க ஒரு வெப்சைட் அப்ளிகேஷன் தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பினாமிகள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் பொதுமக்கள் ஒரு புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம்.

இரண்டு லட்சம் கோடியா?

ஊழலை பற்றி பேச தராதரம் வேண்டும். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் திமுக நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்காது. தற்போது முதலமைச்சரின் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை. ஆனால் நமக்கு தைரியம் உள்ளது. திமுகவினரிடம் உள்ள இரண்டு லட்சம் கோடியா? வாட்சின் பில்லா? இப்படி டீக்கடையில் பேசுவார்கள். பாஜக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

பாஜகவிற்கு 25 எம்.பிக்கள்

நீங்கள் வசிக்கும் இடத்தில் பூத் கமிட்டி இல்லை என்றால் நீங்கள் அவமானமாக நினைக்க வேண்டும். எல்லாம் சரியாகி விடும். டூ ஆர் டை காலத்தில் நாம் உள்ளோம். 2024ஆம் ஆண்டு திமுக கட்சிக்கு முடிவுரை எழுத முடியும். 25 எம்.பி.,க்கள் வாங்கி விட்டால் போதும். அதன்பிறகு திமுக ஆட்சியில் இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? நடைபிணம் ஆகிவிடும்.

எத்தகைய சூழ்நிலையையும் உருவாக்கி விடலாம். இதற்கு ரஃபேல் வாட்ச்சும் உழைக்கும். தொண்டர்கள் தான் பாஜக வெற்றியை தீர்மானிப்பவர்கள். எனவே நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். தொண்டர்கள் கடுமையாக பாடுபடுங்கள். விரைவில் கோவையில் பொதுக்கூட்டம் நடக்கும். 2024ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் வரும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.