வடபழனி கோயில்: `டிக்கெட் விற்பனையில் முறைகேடு' – நீதிபதி புகார்… சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் எஸ்.எம். சுப்பிரமணியம். இவர் கடந்த சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் நீதிபதி தனது வி.ஐ.பி அந்தஸ்தை பயன்படுத்திச் சிறப்புத் தரிசனத்தில் செல்லாது, பொதுமக்களைப் போலக் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி சிறப்புத் தரிசன செய்ய முடிவு செய்துள்ளார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்

இதனையடுத்து டிக்கெட் கவுன்ட்டரில் மூன்று 50 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட்களை 150 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். டிக்கெட் கவுண்டரிலிருந்த ஊழியர்கள் நீதிபதியிடம் இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டையும், ஒரு ஐந்து ரூபாய் டிக்கெட்டையும் கொடுத்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி அங்குள்ள ஊழியர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்கள் நீதிபதியிடம் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இது குறித்து புகார் அளிக்கக் கோயில் வளாகத்தில் எந்த அறிவிப்புப் பலகையும் இல்லை. மிக முக்கியமான கோயிலில் இந்த நிலைமை என்றால், தமிழகத்தில் உள்ள மற்ற கோயில்களின் நிலைமை என்ன என்பது குறித்து, நீதிபதி தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த புகார் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆய்வு செய்யும் அமைச்சர் சேகர் பாபு

நீதிபதி புகார் தெரிவித்திருந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரடியாக வடபழனி முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். கோயிலிருந்த பொதுமக்களிடம் அங்குள்ள குறைகள், புகார்களைக் கேட்டறிந்துகொண்டார். அதோடு, பணியிலிருந்த ரேவதி, ரவி என்ற இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர், இது குறித்து துறைரீதியான விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.