திருமலை: ஆந்திரமாநிலம் காக்கிநாடாவில் கொரோனா பீதியில் 3 ஆண்டுகளாக தாய், மகள் வீட்டிலேயே முடங்கினர். இதில் தாய்க்கு உடல்நிலை பாதித்ததால் சிகிச்சை அழைத்தும் வர மறுத்ததால், சுகாதாரத்துறையினர் கதவை உடைத்து இருவரையும் மீட்டனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கசுலுரு அடுத்த குய்யேறு கிராமத்தை சேர்ந்தவர் கர்னிடி சூரிபாபு(48). இவரது மனைவி மணி(45). தம்பதியின் மகள் துர்காபவானி(20). கர்னிடி சூரிபாபு தள்ளு வண்டியில் காய்கறிகள் வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் அனைவரையும் போல் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார். சகஜ நிலை திரும்பியதும் கர்னிடி சூரிபாபு மட்டும் வழக்கம்போல் காய்கறி வியாபாரத்திற்கு சென்று வந்தார்.
ஆனால், சூரிபாபுவின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பீதியில் வீட்டிலேயே இருந்ததால் லேசான மனநல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக தாயும், மகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் கதவுகளை அடைத்து கொண்டு வீட்டிலேயே இருந்து வந்தனர்.
அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வெளியே வரும்படி அழைத்தும் அவர்கள் வர மறுத்துவிட்டனர். மேலும், எங்களுக்கு சூனியம் செய்ய வந்தீர்களா? என்று கதவை திறக்காமல் உள்ளிருந்து அவர்களிடம் பேசி வந்தனர். இதனால், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவர்களிடம் பேசுவதை நிறுத்தினர்.
இதில் சூரிபாபு தினமும் காய்கறி வியாபாரத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்களை வாங்கி வந்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக மனைவி மணியின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால், சூரிபாபு தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்குமாறு தூக்குத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கூறியுள்ளார். நேற்று முன்தினம் சுகாதார துறையினர் வந்து அழைத்தும் அவர்கள் கதவு திறக்கவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் கதவுகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர்.
அப்போது தாயும், மகளும் சிகிச்சை பெற மறுத்து ஊழியர்களை தாக்கியுள்ளனர். பின்னர், போலீசார் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.