தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை இணை செயலாளர் மு.கருணாநிதி, துணை செயலாளர் ஸ்ரீ ரா.ரவி, பிரிவு அலுவலர் ப.பியூலாஜா உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிலுவையில் உள்ள அரசு உறுதிமொழிகள்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு உறுதிமொழி குழுவின் தலைவரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு உறுதிமொழிகள் மீது தொடர்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசு அலுவலர்கள் உடன் ஆய்வுக் கூட்டம்
இதனை தொடர்ந்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அரசு உறுதிமொழி குழுவில் மொத்தம் 221 உறுதிமொழிகள் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான நடவடிக்கையால் 90 உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப் பட்டுள்ளன.
நிர்ணயம் செய்யப்பட்ட கால அளவு
துறையின் பதில்கள் இந்த குழுவிற்கு திருப்தி அளிக்காத காரணத்தால் 28 உறுதிமொழிகள் படித்து பதிவு செய்யப்பட்டன. எஞ்சிய 103 உறுதிமொழிகள் தொடர்பான பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
மேட்டூர் அணை நிலவரம்
மேலும் பேசுகையில், மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படும் போது எதிரே உள்ள தளத்தினை கான்கிரீட் தளமாக மாற்றுதவற்கு தேவையான மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
வறண்ட ஏரிகளில் நீரேற்றம்
மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 79 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் செய்வது, திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் வழங்கும் திட்டப் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் சமர்பிக்கப்படும்
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துருக்கள் குறித்த அரசு உறுதிமொழி குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று உதயசூரியன் தெரிவித்தார். இதன்மூலம் சேலம் மாவட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு திட்டமிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.