டெல்லி : வங்கி கணக்கு தொடங்கி காப்பீட்டு திட்டத்தில் அதிகம் பதிவு செய்துள்ள மாவட்டங்கள் பட்டியலில் விருதுநகர் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்தெடுத்து முன்மாதிரி மாவட்டங்களாக மேம்படுத்தும் முயற்சியில் 2018-ம் ஆண்டு முதல் நிதி ஆயோக் ஈடுப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தமிழகத்தின் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. சுகாதாரம், கல்வி, வேளாண் மற்றும் நீர் மேலாண்மை, நிதி மற்றும் திறன் மேம்பாடு உட்கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த மாவட்டங்களின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தில் 112 மாவட்டங்களில் விருதுநகர் முதல் இடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 54 கிராமத்தில் குறைந்தபட்சம் குடும்பத்தில் ஒருவரது பிரதமர் காப்பீடு உள்ளிட்ட காப்பீடு திட்டங்களில் பதிவு செய்துள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் சுமார் 1,90,000 பேர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வங்கிகள் இணைந்து இதனை சாத்தியப்படுத்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.