வாஷிங்டன், :மைனஸ் 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை என்ற வார்த்தையை கேட்கும்போதே முதுகுத்தண்டை உறைய வைக்கும். இந்த வெப்பநிலை அமெரிக்காவில் நேற்று முன்தினம் பதிவானது. இங்கு, குளிர்கால சூறாவளி ஏற்பட்டு, நாடு முழுதும் பெரும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர், அதாவது, 20 கோடி பேருக்கு கடும் குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; 15 லட்சம் வீடுகள், அலுவலகங்களில் மின்சார வசதி இல்லை.
பூஜ்ஜியம் டிகிரி செல்ஷியஸ் என்பது, உறைபனி துவங்கும் நிலையை குறிக்கும். அமெரிக்காவில், குளிர்கால சூறாவளி வீசியதால் நேற்று முன்தினம், மைனஸ் 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதையடுத்து, நாடு முழுதும் முடங்கியது.
![]() |
சூறாவளி வெடிகுண்டு
நாட்டின், 50 மாகாணங்களில் உள்ள மக்கள் தொகையில், 60 சதவீதம் பேருக்கு, அதாவது, 20 கோடி பேருக்கு கடும் குளிர் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இது மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளியூர் மற்றும் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், அமெரிக்க மக்கள் தவிக்கின்றனர்.
இந்த பனிக்கால சூறாவளியில், கடுமையான பனிப்பொழிவு, உறையவைக்கும் பனிக்காற்று வீசி வருகிறது. கொதிக்க வைத்த நீரை மேலே வீசினால் அது அப்படியே உறைந்துவிடும் அளவுக்கு காற்றின் தன்மை உள்ளது.
இத்துடன், ‘பாம் சைக்ளோன்’ எனப்படும் சூறாவளி வெடிகுண்டு சில இடங்களில் ஏற்பட்டது. அதாவது, 24 மணி நேரத்தில் காற்றின் அழுத்தம் கடுமையாக குறைவது, சூறாவளி வெடிகுண்டு என அழைக்கப்படுகிறது.
120 கி.மீ., வேகம்
இது அதிக அளவு மழை அல்லது பனிப்பொழிவை ஏற்படுத்தும். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வெள்ளத்தையும், சூறாவளி காற்றையும் வீச வைக்கும்.
வட அமெரிக்காவில் பல நகரங்களில் பாயும் எர்ரி நதியில், 26 அடி உயரத்துக்கு அலை எழுந்ததாக கூறப்படுகிறது. ஒஹியோவின் பார்போர்ட் துறைமுகத்தில், 120 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இந்த பனிக்கால சூறாவளியால், நாடு முழுதும் மின்சார வினியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாடு முழுதும், 15 லட்சம் வீடுகள், அலுவலகங்கள் மின்சாரம் இன்றி இருட்டில் மூழ்கின.
கடுமையான பனிப்பொழிவால், சாலைகள் மூடப்பட்டன. நாடு முழுதும் மக்கள், வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.
மக்கள் பீதி
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக வெளியூர் மற்றும் சொந்த ஊருக்கு செல்வதற்கான பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் மட்டும், 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதைத் தவிர, 7,600க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
பனிப்பொழிவு தீவிரமாக இருந்ததால், எதிரே செல்பவர்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. இதனால், பல்வேறு நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒஹியோவில், 50 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மிச்சிகனில், ஒன்பது டிராக்டர் டிரெய்லர்கள் மோதிக் கொண்டன.
குளிர்கால சூறாவளியால் அமெரிக்கா முழுதும் உறைந்து உள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்பதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்