புதுடில்லி, கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவரும், தொழில் அதிபருமான தீபக் கோச்சார் ஆகியோரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்த சந்தா கோச்சார், ௬௧, நாட்டின் மிகப்பெரும் தனியார் வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக, ௨௦௦௯ முதல் ௨௦௧௮ வரை இருந்தார்.
புகார்
அப்போது, அவர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு, ‘வீடியோகான்’ குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக புகார் எழுந்தது.
இதில், தொழிலதிபரான அவரது கணவர் தீபக் கோச்சார் பலனடைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 2018ல் விசாரணை நடத்தியது. குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து சந்தா கோச்சார், ௨௦௧௮ல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த முறைகேடு தொடர்பாக சந்தா மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இவர்களின் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.
அனுமதி
இந்நிலையில், இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் நேற்று முன்தினம் சி.பி.ஐ., சார்பில் ‘சம்மன்’ அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், இருவரும் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், புதுடில்லியில் உள்ள நீதிமன்றத்தில் இருவரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் ௨௬ம் தேதி வரை மூன்று நாட்கள் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்சம் தொட்டவர்
வங்கித் துறையில் பல உச்சங்களையும், விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றவர் சந்தா கோச்சார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், ௧௯௮௪ல் பயிற்சி அதிகாரியாக நுழைந்த அவர், படிப்படியாக முன்னேறினார். ௨௦௦௯ல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.இதை, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாற்றி, தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உலக அளவில் பிரபலமான பல பத்திரிகைகள் வெளியிடும் சர்வதேச பிரபலங்கள் பட்டியலில் தொடர்ந்து சந்தா இடம்பெற்று வந்தார். குறிப்பாக, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிடும் ஆண்டின் சிறந்த ௧௦௦ அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் பல ஆண்டுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தார்.வங்கித் துறை சேவைக்காக, ௨௦௧௧ல் ‘பத்மபூஷண்’ விருதும் பெற்றார்.ஆனால், வீடியோகான் நிறுவனத்துக்கு மோசடியாக கடன் வழங்கி, அதன் வாயிலாக தன் கணவர் பெயரில் பல கோடி ரூபாய் பணம் பெற்றதாக எழுந்த புகாரில், அவருடைய பெருமைகள் சரிவடைந்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்