'இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்' – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

“இந்தியா மற்றும் சீனாவின் உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்,” என, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரு நாடுகள் எல்லையில் சீனா அத்துமீறுவதும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் பல ஆண்டுகளாக தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் தனது படைகளை குவித்து ஆக்கிரமிப்பு மற்றும் அராஜக வேலைகளில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து இந்திய தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இரு நாட்டு படைகளுக்கு இடையேயான மோதலில் இந்திய வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால், சீனா முதலில் வீரர்கள் உயிரிழக்கவில்லை என மறுத்து விட்டு, உயிரிழந்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவப்படுத்தியது. இந்த புகைப்படங்கள் வெளிவந்து அதனை உறுதிப்படுத்தின. பின்னர் 4 வீரர்கள் உயிரிழப்பு என குறைந்த எண்ணிக்கையை வெளியிட்டது.

‘இனி கொரோனா பாதிப்புகளை வெளியிட போவதில்லை’ – சீனா அதிரடி!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் என்ற பகுதியில், சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றன. இதைப் பார்த்த இந்தியப் படைகள் அவர்களை விரட்டி அடித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே, “இந்தியா மற்றும் சீனாவின் உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்,” என, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தூதரக அளவில் மற்றும் ராணுவ அடிப்படையிலான வழிகளில் தொடர்புகளை மேம்படுத்தி வருகின்றன. இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மை நிலவுவதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் உறவுகள் நிலையான மற்றும் வலிமையான அளவில் வளர்ச்சி காணும் திசையை நோக்கி முன்னேற இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.