பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பெரும் பெயரையும், புகழையும் பெற்றவர் தான் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருந்தார். இதனையடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுக்கடுக்காக குவிந்தது, மிகவும் பிஸியான நட்சத்திரமாக மாறிவிட்டார். இவர் தனது ஒரு படத்திற்கே சுமார் ரூ.150 கோடிக்கும் மேலாக சம்பளம் வாங்கி வருகிறார், நடப்பாண்டின் படி இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் $27 மில்லியன் ஆகும். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் தனது சொத்தை பிணையமாக வைத்து வங்கியிலிருந்து சுமார் ரூ.21 கோடி கடன் தொகையை பெற்றிருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரும் பொருட்செலவில் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் கோபிகிருஷ்ணா மூவிஸ் பேனர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது, அதேபோல ப்ரண்ட்ஸ் பேனர்ஸ் நிறுவனத்தின் கீழ் வெளியிடப்பட்ட ‘சாஹோ’ படமும் பெரும் தோல்வியினை தழுவியது. பாகுபாலி மூலம் வெற்றிநாயகனாக ஜொலித்த இவருக்கு இந்த இரண்டு படங்களும் பெரிய தோல்வியை அள்ளிக்கொடுத்தது. இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியதால் நடிகர் பிரபாஸ் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் புதன்கிழமையன்று பிராபாஸ் ரூ.21 கோடி கடனுக்கான காசோலையை வங்கியிலிருந்து பெற்றிருக்கிறார், இந்த செய்தி தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு படத்திற்கே ரூ.100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கிய பிரபாஸ் எந்த காரணத்தினால் இப்போது ரூ.21 கோடி கடனை பெறுகிறார் என்று பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாது பிரபாஸ் ஒரு சாதாரண ஆள் இல்லை, தெலுங்கு திரையுலகில் அவர் ஒரு மிகப்பெரிய நடிகர், அப்படி இருக்கையில் அவர் ஏன் கடன் வாங்கியுள்ளார் என பலரும் யோசித்து வருகின்றனர். பிரபாஸ் புதிய தொழிலில் முதலீடு செய்வதற்காக தான் வங்கியிலிருந்து கடன் தொகையை பெற்றிருக்கிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.