ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து

இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும்.

பெத்லஹேமில் ஒரு ஏழைத் தொழுவத்தில் பிறந்த குழந்தையே இயேசு கிறிஸ்து ஆவார். இவர் உலகை யதார்த்தமாகப் பார்ப்பதில் பிறப்பிலிருந்தே முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க அவர் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.

இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நெருக்கடி நிலையில் ஒருவரையொருவர் இரக்கத்துடனும் அன்புடனும் வாழ்த்தி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவமாகும்.

“செலவுகளைக் குறைப்போம், எளிமையாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவோம், துன்பப்படுபவர்களுக்கு நம்மிடம் எஞ்சியிருப்பதைக் கொடுப்போம்” என்று பாப்பரசர் போப் பிரான்சிஸ், மனிதநேயத்தின் மதிப்பைக் கற்பிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகை வீட்டுக்கும் ஏழைக் குடிசைக்கும் ஒரேவிதமான நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை வழங்குவதே எங்கள் அரசாங்கத்தின் இலக்காகும்.

எனவே அனைவருக்கும் அன்பைப் பரப்பும் மற்றும் மனிதநேயத்தைப் பகிர்ந்து கொள்ளும் குடிமக்களாக இந்த பண்டிகைக் காலத்தில் அனைவரும் தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதியளிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் அற்புதமான பிறப்பின் மகிமையினால் நம் நாட்டைக் குணப்படுத்தும் வகையில் எதிர்கால தசாப்தத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

மேலும் இயேசு விரும்பிய மனிதநேயம், நல்லிணக்கம், தியாகத்தின் நற்செய்தி ஆகியன எங்கும் பரவி இந்நத்தார் பண்டிகை மகிழ்ச்சிகரமானதாக அமைய வாழ்த்துகின்றேன்.

ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.