சமாதானத்தின் தேவன் எனப் போற்றி புகழப்படும் யேசு பிரான் அவதரித்த நத்தார் தினம் இன்றாகும்.
.கிறிஸ்மஸ் (Christmas) அல்லது கிறிஸ்த்து பிறப்புப் பெருவிழா (நத்தார் ) ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்
உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்;கள் யேசு பாலகனின் பிறப்பை இன்று(25) கொண்டாடுகிறார்கள்.
பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
பாவம் எனும் இருளில் இருந்து மனிதகுலத்தை மீட்பதற்காக அவதரித்தவர் இயேசு என்பது கிறிஸ்தவர்களின் நம்பிகையாகும்.
தெய்வீகத்தன்மையும், மனிதாபிமானத்தையும் சகிப்புத் தன்மையையும் எடுத்தியம்பும் ஓர் அபூர்வ நிகழ்வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்டிகை வரலாற்றில் முக்கிய பங்கை வகித்து வருகின்றது
அயலவர்களையும் அடுத்தவர்களையும் நேசிக்கக்கூடிய அன்பும், சகவாழ்வும் முன்னிலைப்படுத்தப்படும். நல்லிணக்கமும் நத்தார் தினத்தில் நாம் காணும் அகில ரீதியான அடையாளங்களாகும்.
நத்தார் தின நள்ளிரவு ஆராதனை நாடளாவிய ரீதியில் வெகுசிறப்பாக இடம்பெற்றன. பிரதான ஆராதனை பேராயர், கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பன்னிப்பிட்டிய கிறிஸ்து ராஜா தேவாலயத்தில்; இடம்பெற்றது.
கிறிஸ்து பிரானின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் தினத்தை வறிய மக்களுடன் கொண்டாடுமாறு பேராயர், கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை தனது நத்தார் தின செய்தியில் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். ஏராளமான மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில்இ சகலரும் தம்மால் இயன்ற வகையில் வறிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நத்தார் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்;த்துத் தெரிவித்துள்ளார். இருளை நீக்கி, மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையே நத்தார் பண்டிகையைக் குறிப்பதாக ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் நத்தார் தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். குரோதத்தில் இருந்து விடுபட்டு, பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு பொருளாதார ரீதியிலும் சிறந்த நாட்டை தோற்றிவிப்பதற்காக இந்த நத்தார் பண்டிகையினை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.