தஞ்சையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “தமிழ்நாட்டில் அன்றாடம் ஒரு சட்டம் மற்றும் புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அவை ஏழை எளிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக உள்ளது. தற்பொழுது தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தின் பாரம்பரிய அரிசியின் பெருமைகள் குறித்து இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் உட்பட பலர் பேசி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. துரிதமாக செயல்பட்டு தமிழக அரசு இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும்.

இல்லையெனில் மூத்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். தஞ்சை மாவட்டம் திருமண்டக்குடி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம் விவசாயிகளை மிரட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என பேசியுள்ளார்.