காலில் விழாத குறையாக கேட்டும் சரண்யா வரவில்லை : அருவா சண்ட தயாரிப்பாளர் வருத்தம்

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அருவா சண்ட'. சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு, தரண்குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தயாரிப்பாளரும், நாயகனுமான ராஜா பேசியதாவது: இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உயிரை கொடுத்து இந்த விழாவை நடத்துகிறோம். இந்த விழாவில் ஹீரோயின் மட்டுமல்ல படத்தில் அம்மா கேரக்டரில் நடித்துள்ள சரண்யாவும் வரவில்லை. சரண்யா பொண்வண்ணன் மேடத்திடம் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் மறுத்துவிட்டார். இதே பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு போயிருப்பார்.

சிறிய பட தயாரிப்பாளர்களை கேவலமாக நினைக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நிறை கஷ்டப்பட்டிருக்கிறேன்; காயப்பட்டிருக்கிறேன். கண்ணீரில் ரத்தம் மட்டும்தான் வரவில்லை. என்போன்ற தயாரிப்பாளர்கள் படத்தின் ரிலீசுக்காக போராடுகிறார்கள். அவர்களுக்காக சப்போர்ட் பண்ணுங்க. சாதாரணமாக கலைத்துறைக்கு வருகிறவர்களை கலைத்துறையில் உள்ளவர்களே நசுக்கிவிடுகிறார்கள். தயவு செய்து சிறு தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், புதியவன், பழையவன் என்று பாரபட்சம் பார்க்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.