நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பயிரிட்ட சி.ஆர்.1009 சப் 1 ரக நெல் விதைகள் பதராக மாறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தற்போது கும்ப பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. சி.ஆர். 1009 சப் 1 என்ற நெல் விதையை வாங்கி சுமார் 50 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் பயிர் செய்தனர். 150 நாட்களில் கதிர் வர வேண்டிய நெற்பயிராகும். வேளாண்மை துறை மூலம் உரிய பரிசோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட பின் தான் விவசாயிகள் 1009 சப் வகை நெல் விதைகளை வாங்கி பயிர் செய்தனர். இவ்வாறு பயிர் செய்யப்பட்ட நெல் பயிராக வராமல், பதராக மாறி உள்ளன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பயிர்கள் போதிய வளர்ச்சி அடையாமல் கதிர்கள் வர தொடங்கியதற்கு காரணம் என்ன? என்பது தெரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். ரகம் மாறி விட்டதா? அல்லது மரபியல் காரணமா? என்பது தெரிய வில்லை. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பறக்கை குளம் மூன்றாவது பரவு பகுதியில் சுமார் 300 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் விளைச்சலுக்கு வராமல் பதராகி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பறக்கை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து 1009 சப் என்ற நெல் விதையை விவசாயிகள் வாங்கி பயிரிட்டனர். 150 நாட்களில் கதிர் வர வேண்டிய நெல் பயிர் தற்போது 60 முதல் 80 நாட்களில் பூத்து கதிர் வந்த நிலையில் அவை நெல் கதிராக வராமல் முற்றிலும் பதறாக மாறி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் புகார் செய்துள்ளனர்.