பொங்கல் பரிசு தொகை மாற்றம் – ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்?

பொங்கல் பரிசுத் தொகையாக 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2021ல் அதிமுக ஆட்சியின் போது அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் ரூ.2,500 பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 2022 திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் இல்லை. மேலும் பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சனங்களும் அப்போது எழுந்தன.

இந்த நிலையில் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசில் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம் பெறவில்லை. அறிவிக்கப்பட்ட ரொக்கப் பணமும் குறைவாக உள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வரும் நிலையில், பொங்கல் பரிசாக ரூ.1,000 மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2,500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் 2,500 ரூபாயாவது உயர்த்தி வழங்கிட வேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச வேட்டி – சேலை வழங்கிட வேண்டும்.

பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் இந்த பொங்கல் தித்திக்கும் பொங்கலாக அமைய இந்த அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.