பழங்குடி பெண்ணை ஜனாதிபதி ஆக்கியது பாஜக அரசு – ஜே.பி.நட்டா பெருமிதம்!

“பழங்குடி பெண்ணை ஜனாதிபதி ஆக்கியிருப்பது பாஜக அரசு,” என, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தொண்டர்களிடையே அவர் பேசியதாவது:

அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்குடன் பாஜக அரசு செயல்பட்டு வருகின்றது. பழங்குடி பெண்ணை ஜனாதிபதி ஆக்கியிருப்பது பாஜக அரசு. பழங்குடி, பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக, எம்.பிக்களாக பா.ஜ.கவில் இருப்பவர்கள் அதிகம். ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் வழங்கும் திட்டம், கழிப்பிடம் வழங்கும் திட்டம் செயல்படுத்தியது. 12 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் கழிப்பிட வசதி பெற்று இருக்கின்றனர். பெண்களின் தேவையை புரிந்து கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

நாடு முழுவதும் ஏராளமான மருத்துவக் கல்லூரிகளை பாஜக அரசு கொடுத்து இருக்கிறது. இதில் அதிக மருத்துவக் கல்லூரிகளை தமிழகம் பெற்று இருக்கிறது. இந்த கூட்டம் மக்களவை தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் ஏற்படுத்தும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்து கொண்டு இருக்கிறோம். சீனா, அமெரிக்க போன்ற நாடுகள் கூட பிரதமரின் தலைமை பண்மை உற்று பார்த்து கொண்டு இருக்கின்றன. ஏற்றுமதியில் இரும்பு, மருத்து, ஆயத்த ஆடை என அனைத்திலும் முன்னணியில் இருக்கிறோம். ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம்.

பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் என அனைவருக்குமான அதிகாரங்களை கொடுத்து கொண்டு இருக்கிறது. யாரும் சாப்பிடாமல் படுக்கக் கூடாது என்பதற்காக அன்ன யோஜன என்ற வறுமை ஒழிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. 80 கோடி மக்கள் உணவினை சாப்பிட்டு படுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வறுமை கோட்டில் கீழ், ஒரு சதவீதத்திற்கும் கீழ் ஏழை மக்கள் இருக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது. 40 சதவீத இந்திய மக்கள் தரமான மருத்துவம் வசதியை பெறும் வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளுக்கு இந்த அரசு ஏராளமான திட்டங்களை கொடுத்து இருக்கிறது.

மேற்கத்திய நாடுகள் தடுப்பூசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், இந்தியாவிலேயே இரு தடுப்பூசிகளை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி காப்பாற்றி இருக்கிறது மத்திய அரசு. இப்போது மாஸ்க் போடாமல் நம்மால் இருக்க முடிகிறது என்றால் பிரதமரின் திட்டம் தான் காரணம். நாம் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குகிறோம். 100 நாடுகளுக்கு வழங்கி இருக்கிறோம். அதில் 41 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசியை கொடுத்து இருக்கிறோம். உக்ரைன், ரஷ்யா அதிபர்களிடம் பேசி அங்கிருந்த நம் நாட்டை சேர்ந்த 42 ஆயிரம் மாணவர்களை பிரதமர் மோடி மீட்டு வந்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.