பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளத்தில் வனப் பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்திருப்பதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, கேரள வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எடுத்துக் கூறியதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலான பகுதிகளை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளோ தொழிற்சாலைகளோ இருக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த உத்தரவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது நடைமுறைப்படுத்த முடியாத தீர்ப்பு என தெரிவித்துள்ள கேரள அரசு, கேரளாவில் வனத்தை ஒட்டிய பகுதிகள் பலவற்றில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது அரசுக்கு இயலாத காரியம் என்றும் அது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கேரள அரசு, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பினராயி விஜயன், இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமரிடம் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, கரோனா கால செலவினங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.