புதுக்கோட்டையில் 5 தலைமுறைகளாக நீடித்த தீண்டாமை கொடுமைக்கு முடிவு: பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்ற ஆட்சியர்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 5 தலைமுறைகளாக கோயிலுக்குள் நுழைய மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்குள் அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் செய்யவைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் அருகே வேங்கை வயல் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகள் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் நடந்த வேங்கை வயல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வண்டிதாபாண்டே ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்சியரிடம் பேசிய பட்டியலினமக்கள் தங்களை 5 தலைமுறைகளாக ஐயனார் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுத்து ஒதுக்கியுள்ளதாக வேதனைதெரிவித்தனர். இதனை அடுத்து உடனடியாக ஆட்சியர் கவிதா ராமு அவர்களை அழைத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். முன்னதாக கோவில் பூசாரியான மாற்று சமூகத்தை சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி சாமி வந்ததை போல்ஆடி ஆதிதிராவிட மக்களை இழிவான சொற்களை பயன்படுத்தி பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் அப்பெண் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.