திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளதை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
2012-ல் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரில் உண்மையில்லை என காங்கிரஸ் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
எனினும், கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இடதுசாரிகள் தலைமையிலான அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. விசாரணை அறிக்கை திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
முதல்வராக இருந்த உம்மன் சாண்டியால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த பெண், தான் குறிப்பிடும் தினத்தன்று முதல்வரின் அலுவலக இல்லத்திற்குச் சென்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ள சிபிஐ, அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு புனையப்பட்டது என்றும் கூறியுள்ளது. சிபிஐ-யின் இந்த அறிக்கை மூலம் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது என தெரியவந்துள்ளது.
சிபிஐ-ன் இந்த அறிக்கையால் கேரள காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன், ”முதல்வர் பினராயி விஜயன் இந்த வழக்கை வேண்டும் என்றே சிபிஐ வசம் ஒப்படைத்தார். அப்போது, உம்மன் சாண்டியும், பிற தலைவர்களும் முதல்வர் பினராயி விஜயனால் அவமானப்படுத்தப்பட்டார்கள். எனினும், வழக்கை நேர்மையாக விசாரித்து உண்மையை சிபிஐ வெளிப்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவர்களை இழிவாக சித்தரித்துப் பேசிய பினராயி விஜயன், அதற்காக தற்போது மன்னிப்பு கோர வேண்டும். உம்மான் சாண்டி, அவரது குடும்பத்தினர், மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் பினராயி விஜயன் மன்னிப்பு கோர வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எந்த அளவு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்று நடந்து கொள்வதை பினராயி விஜயன் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்” என வலியறுத்தியுள்ளார்.