பெய்ஜிங்: ஜனவரி 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்து உள்ளது. சீனாவில் வூஹான் நகரில் 2019-ல் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சீனாவிதித்தது. எல்லைகள் மூடப்பட்டநிலையில், கரோனா வைரஸ்தொற்று பாதிப்பை அந்நாட்டு அரசு சுகாதாரப் பட்டியலில் ‘‘ஏ’’ பிரிவில் வைத்திருந்தது.கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வந்தது.
இதன்படி, வெளிநாட்டில்இருந்து வரும் பயணிகள் அரசுவிடுதிகளில் 2 வாரம் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது. இதுபடிப்படியாக 3 நாள்கள் கண்காணிப்புடன் ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.
மக்கள் போராட்டம்: தற்போது கரோனா அதிகமானதால் பல்வேறு செயல்பாடுகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச எல்லைகளை மீண்டும் திறந்து, தனிமைப்படுத்துதலையும் ரத்துசெய்யப்போவதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 8-ம் தேதி முதல் இது அமலுக்கு வரப் போவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.