மாணவ மாணவிகள் ஹேப்பி; ஓரிரு நாளில் செம அறிவிப்பு!

சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கின.

இந்த நிலையில், பிஎஃப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, ‘மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இதற்கு முன்பு கொரோனா பரவலை தடுக்க பணியாற்றியது போலவே தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி சோதனையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்றபடி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அனைத்து விமான நிலையங்களிலும் தமிழ்நாடு சுகாதார துறையினர் முகாமிட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் தான் தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவ மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு திரும்ப உள்ளனர். கடந்த முறை கொரோனா பாதிப்பின்போது, மாணவ மாணவிகள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். தொற்று குறைந்த பின் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.

தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளி திரும்பும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்பது குறித்து சுகாதாரத் துறையிடம் பள்ளி கல்வித்துறை கருத்து கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவ மாணவிகள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்பது குறித்து சுகாதாரத்துறையிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கல்வித் துறை சார்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.