புதுடெல்லி: 2022-ல் தினந்தோறும் சராசரியாக 9 ஆர்டர்கள் வீதம் சொமேட்டோ செயலியில் சுமார் 3,330 முறை உணவு ஆர்டர் செய்துள்ளார் டெல்லியில் வசித்து வரும் உணவுப் பிரியர் ஒருவர். அவருக்கு ‘நாட்டின் மிகப்பெரிய உணவுப் பிரியர் – 2022’ என பட்டம் கொடுத்துள்ளது சொமேட்டோ.
இன்றைய டிஜிட்டல் உலகில் வசித்து வரும் சிலரது வீட்டில் சமைக்க டொமேட்டோ (தக்காளி) இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் பயன்படுத்தி வரும் போனில் சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவன செயலிகள் நிச்சயம் இருக்கும். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும்.
அந்த வகையில் ஸ்விகியை தொடர்ந்து சொமேட்டோ நிறுவனமும் இந்த ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஸ்விகியை போலவே இந்த செயலியிலும் பிரியாணிதான் அதிக ஆர்டர்களை பெற்றுள்ளது. நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளன. அதோடு நிமிடத்திற்கு 137 பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
பீட்சா தொடங்கி மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃப்ரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் போன்ற ஆர்டர்கள் பொதுவாக உணவு ஆர்டர்களில் அதிகம் இருந்ததாக தகவல்.
இதில் இந்திய அளவில் டெல்லியை சேர்ந்த அன்கூர் என்பவர் சொமேட்டோ செயலியில் 2022-ல் மட்டும் சுமார் 3,330 ஆர்டர்களை செய்துள்ளார். சராசரியாக நாள் ஒன்றுக்கு 9 ஆர்டர்களை அவர் மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்குதான் அந்த பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.