2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் குறித்த விரைவுப் பார்வை இது.
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி கூடவே டெல்லி மாநகராட்சித் தேர்தலில் அபார வெற்றி, குஜராத் சட்டப்பேரவையில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் என்று தனது பலத்தை நாளுக்கு நாள் ஆண்டுக்கு ஆண்டு விஸ்தரித்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால் இந்திய அரசியல் முகங்களில் முக்கியமானவர். அதுவும் 2022 ஆம் ஆண்டு அவருக்கு வெற்றிகளை வாரிக் குவித்துள்ளது. டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியது, அங்கு அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அன்னா ஹசாரே தலைமையில் நடந்த இந்தப் போராட்டம் பிரம்மாண்ட போராட்டமாக உருவெடுத்து உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அந்த மேடையில்தான் மக்களுக்கு அரவிந்த கேஜ்ரிவால் அறிமுகமானார். அன்னா ஹசாரேவின் தொப்பி அடையாளம் பெற்றது. அந்தத் தொப்பியில் ஆம் ஆத்மி என்று எழுதி விளக்குமாற்றை கட்சியின் சின்னமாக்கி டெல்லி தேர்தலில் களம் கண்ட கேஜ்ரிவால் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றார். 2012ல் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. இப்போது 2வது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது.
கட்சியின் பெயருக்கு ஏற்ப சாமான்ய மக்களின் நலனை முன்னிறுத்தியே தன் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார் கேஜ்ரிவால். டெல்லியில் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வரை கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அரசுப் பள்ளியில் படித்து ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வில் மாணவர்களை வெற்றிப் பெறச் செய்கிறோம் என்று அவர் பெருமைப்பட்டுக் கொள்வது ஏற்புடையதுதான்.
ஆனால், அவரது சமீப கால பேச்சுக்கள் எல்லாமே பாஜகவின் பி டீம் போல் அவரை அடையாளம் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். “இந்திய ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் இன்னொரு பக்கம் லக்ஷ்மி, விநாயகர் படமும் அச்சடிக்க வேண்டும்” என்று பேசி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். டெல்லி மாநகராட்சித் தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தவுடன் பிரதமரின் ஆசிர்வாதம் என்று அவர் வெற்றி உரையில் பேசியதும் சர்ச்சையானது.
2022-ன் இந்திய அரசியல் முகங்கள்: ராகுல் முதல் கேஜ்ரிவால் வரை.. கட்டுரையில் இருந்து.