சிவகங்கை: ‘எனது சாவுக்கு உன் அப்பாதான் காரணம்’என மகனுக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு, சென்னை பெண் தற்கொலை செய்து கொண்டார். சிவகங்கை அருகே கருதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (48). இவரது மனைவி மகேஸ்வரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உளளனர். மகேஸ்வரி தனது 2 மகன்களுடன் சென்னையில் வசித்து வந்தார். பாண்டியன் கருதுபட்டியில் சொந்தமாக மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி, கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக மகனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆடியோவில், ‘‘தம்பியை பத்திரமாக பார்த்துக்கொள். நன்றாக படி. என்னுடைய சாவிற்கு காரணம் உன்னுடைய அப்பா தான். என்னை மன்னித்து விடு’’ என்று அழுது கொண்டே பேசியுள்ளார். இந்த ஆடியோ சிவகங்கை பகுதியில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியனை கைது செய்தனர்.
