மதுராந்தகம்: சேலம் மாவட்டத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் நேற்றிரவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சித்தர் பீடம் உள்பட பல பகுதிகளில் வழிபாடு செய்துவிட்டு இன்று காலை சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். இவர்கள் அனைவரும் பஸ்சில், மேல்மருவத்தூரில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர்.
மதுராந்தகம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் வரும்போது அந்த பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. இந்த நிலையில், பக்தர்கள் சென்ற பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவரால் எதிரே வந்த வாகனத்தை சரியாக கணிக்கமுடியாததால் அவ்வழியாக சென்ற லாரியின் பின்பகுதியில் பஸ் மோதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பெண்கள், டிரைவர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.
இவர்களை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக மேல்மருவத்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்து தொடர்பாக மதுராந்தகம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.